Friday, February 10, 2006

கே.எஸ். பாலச்சந்திரன் .... ஒரு சுயம்பு - பி.எச். அப்துல் ஹமீது




- பி.எச். அப்துல் ஹமீது

கே.எ°. பாலச்சந்திரன் அவர்கள் என் இனிய நண்பர். சிறந்த படைப்பாளி. நல்ல நடிகர்.

அவரை ஒரு சுயம்பு என்று தான் நான் சொல்வேன்.

ஒரு சிறந்த படைப்பாளியாக அவர் எழுதிய நாடகங்களை நெறிப்படுத்தக் கூடிய பாக்கியம் எனக்குக் கிடைத்தது.

குறிப்பாக அவரின் கிராமத்துக் கனவுகள் என்ற நாடகத்தை நான் வானொலிக்காகத் தயாரித்தேன்.

அந்த நாடகத்தை கேட்டவர்களின் மனத்திரைகளில் ஒரு திரைப்படத்தை அவர்கள் உருவகிக்கக்கூடிய அளவுக்கு கே.எஸ். பாலச்சந்திரன் அவர்களின் எழுத்து உயிரோட்டமானதாக .... உணர்வுபூர்வமானதாக அமைந்திருந்தது.

நகைச்சுவை நடிப்பிலும் சோபித்து விளங்குபவர்கள் சோகத்தை வெளிப்படுத்தும் படைப்பாற்றலிலும் இவரைப் போல் சோபித்துக் கொண்டு வேறு எவராது இருக்கின்றார்களா? என்று கேட்டால்..... இல்லை என்றுதான் சொல்லவேண்டும். அந்த அளவுக்கு அற்புதமான திறமைகளைக் கொண்ட உன்னதமான ஒரு கலைஞர் இவர்.


சமீபத்தில் அவரைப் பெருமைப் படுத்தக் கூடிய ஒரு வாய்ப்பு எனக்குக் கிடைத்ததற்காக மிகவும் சந்தோஷப்பட்டேன்.

தெனாலி படத்தில் கமல் அவர்கள் நடித்துக் கொண்டிருந்த போது கே.எஸ். பாலச்சந்திரன் அவர்களின் கிராமத்துக் கனவுகள் என்ற வானொலி நாடகத்தின் ஒலி நாடாவையும் கமலிடம் கொடுத்திருந்தேன்.

கமல் அவர்கள் குறிப்பாக அந்த கிராமத்துக் கனவுகள் என்ற நாடகம் யார் எழுதியது? அது என்னை மிகவும் பாதித்தது என்று சொன்னார். நான் திரு. கே.எஸ். பாலச்சந்திரன் அவர்களின் பெயரை பெருமிதம் பொங்கச் சொன்னேன்.

தெனாலி படப்பிடிப்பு முடிவடைந்தபின் கமல் அவர்கள் கனடா சென்றிருந்தபோது டி.வி. சிலோன் என்ற தொலைக்காட்சிக்காக அவரை கே.எஸ். பாலச்சந்திரன் அவர்கள் பேட்டிகாண வந்திருந்த போது அவர் யார் என்று அறியாமலேயே கமல் அவர்கள் கிராமத்துக் கனவுகள் விஷயத்தைச் சொன்னபோது பாலச்சந்திரன் நெகிழ்ந்து விட்டாராம்.

கே.எஸ். பாலச்சந்திரன் என்ற ஒரு சிறந்த கலைஞனை .... கமல் என்ற ஒரு இமய நடிகருக்கு அறிமுகப்படுத்தக் கூடிய வாய்ப்பு எனக்குக் கிடைத்ததை .... என் நண்பருக்கு என்னால் செய்யமுடிந்த சிறு தொண்டாகக் கருதுகிறேன்.

பின்பு .... தெனாலி வெள்ளிவிழா மேடையில் திரு. கே.எஸ். பாலச்சந்திரன் அவர்களைப் பற்றி கமல் பேசியதை எல்லாம் நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
அதைக் கேட்க எனக்கு அளவற்ற ஆனந்தமும், பெருமையுமாக இருந்தது.

என் இனிய நண்பர் கே.எஸ். பாலச்சந்திரன் அவர்களின் கலைப்பயணம் மேலும் சிறப்படையவும், என்றென்றும் பரிபூரண உடல் நலத்துடன் அவர் உற்சாகமாக செயல்படவும் நம் எல்லோருக்கும் பொதுவான இறைவனை வணங்குகிறேன்.

பேட்டி - உதயா

திரு.கே.எஸ். பாலச்சந்திரன்.அவர்களின் இணையத்தளம்.

http://balachandran.homestead.com/home.html

0 comments: