Friday, February 10, 2006

பி.எச்.அப்துல் ஹமீதின் சிறப்புப் பேட்டி






பி.எச்.அப்துல் ஹமீதின் சிறப்புப் பேட்டி
-----------------------------------------------------




உலகத்தில் முதன் முதலாக ஆரம்பிக்கப்பட்ட தமிழ் வானொலி என்ற பெருமையைப் பெற்றதும், உலகத்தமிழ் ரசிக நெஞ்சங்களை வீட்டுக்கு வீடு வானொலிப் பெட்டிக்கருகில் இழுத்து வந்து குழுமியிருக்கச் செய்ததும் இலங்கை வானொலி என்றால் அது மிகையில்லை.


தமிழ் ரசிகனின் வாழ்வில் ஒன்றிப்போனது இலங்கை வானொலி. காலைக் கதிரில் துயிலெழுப்பி... அந்தநாள் ஞாபகங்களை சுருதி மீட்டி... பொங்கும் பூம்புனலாய் பரவசப்படுத்தி... இரவின் மடியில் நாம் தலை சாய்க்கும் வரை நமது அன்றாட வாழ்வோடு பின்னிப்பிணைந்து செயலாற்றிக் கொண்டிருக்கிறது இலங்கை வானொலி.

இத்தகைய சிறப்புப் பெற்ற இலங்கை வானொலியில் ஏறக்குறைய 35 ஆண்டுகள் அறிவிப்பாளராக பணி புரிந்து தமிழ் கூறும் நல்லுலகெங்கும் செம்மையான தமிழ் உச்சரிப்பாலும், வசீகரமான பேச்சினாலும் ரசிக நெஞ்சங்களைக் கட்டிப்போட்டு வைத்திருக்கும் திரு.பி.எச்.அப்துல் ஹமீது அவர்களை செவ்விகண்டோம்.

இவர் நமது நெஞ்சங்களைக் கொள்ளை கொண்ட அறிவிப்பாளர் மட்டுமல்ல... நாடகாசிரியர், இயக்குனர், நடிகர், இன மத மொழி பேதங்களைக் கடந்த ஒரு நல்ல ரசிகர். அத்தோடு படைப்பாளிகள் நல்ல
ஒழுக்கசீலர்களாய்இருக்க வேண்டும் என்பதற்கு ஒரு முன்னுதாரணமான மனிதர் என இவரைப் பற்றி அடுக்கிக் கொண்டே போகலாம்...... இதோ அவர் வழங்கிய செவ்வி .

பாட்டுக்குப்பாட்டு என்ற இலைமறைகாயாக இருக்கும் கலைஞர்களை இனம் கண்டுபிடிக்கும் நிகழ்ச்சியின் பிதாமகர் நீங்கள். இலங்கை வானொலியில் உருவாகி வெற்றிக் கொடி கட்டிய இந் நிகழ்ச்சியை தனியார் தொலைக் காட்சிகளும் கூட பிற இந்திய மொழிகளிலும் தத்தெடுத்துக் கொண்டன.

இதன் வெற்றியைப் பார்த்து அதை படைத்த ஒரு தாயின் பெருமிதத்தோடு உங்கள் உள்ளத்தின் உணர்வுகளை கொஞ்சம் பகிர்ந்து கொள்ளுங்களேன்....

அப்துல் ஹமீது - இந்த நிகழ்ச்சியை இலங்கை வானொலியில் ஆரம்பித்து சுமார் 27 ஆண்டுகள் ஆகிவிட்டன. எனக்குள்ளே ஒரு மனக்குறை இருந்து வந்தது. இந்த பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சியின் மூலம் ஒரு அப்துல் ஹமீதை இனங்காண்கிறார்கள் என்பதை என்னை குறைத்து மதிப்பிடுவதைப்போல எண்ணினேன்.

காரணம்... இலங்கை வானொலியில் வயதில் மிகக் குறைந்த அறிவிப்பாளனாக மிக இளம் வயதிலேயே இணைந்த போதே வெறும் அறிவிப்புகளோடு மட்டுமே நின்றுவிடாமல் ஒலிபரப்பிலே உள்ள பல துறைகளையும் கற்றுணரn வண்டும் என்ற உந்துதல் அந்த வயதிலேயே இருந்தது.

ஆகவே நான் இலக்கியத் துறை சார்ந்த சஞ்சிகை நிகழ்ச்சிகள், பொது அறிவு சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள், செய்தித் தொகுப்புகள், நான் இயக்கிய மிகச் சிறந்த நாடகங்கள் என பல நிகழ்ச்சிகள் இருக்கும் போது இந்த பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சியால் மட்டுமே என்னை அடையாளம் காண்கிறார்களே என்ற மனக்குறைதான் அது. இந்தப் பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சியை ஏன் ஆரம்பித்தேன் .

என்றால் அன்று நானே விரும்பி ஏற்றுக்கொண்ட வேலைப்பளுவில் இருந்து என்னை விடுவித்துக் கொள்வதற்காகவே. இரண்டே இரண்டு கலைஞர்களை மட்டும் வைத்துக்கொண்டு ஈழத்துப் பாடகர்களான வி. முத்தழகு, கலாவதி சின்னச்சாமி ஆகியோர்களுடன் இந்நிகழ்ச்சியை பரீட்சார்த்தமாக முயற்சித்தேன்.

குளியலறை சங்கீத ஞானம் கொண்டவர்களின் திறமையை வெளிக்கொணர்வதற்காக நான் தயாரித்த இந்நிகழ்ச்சி மாபெரும் வெற்றியடைந்ததோடு மட்டுமல்லாமல் விளம்பாதாரர்களும் மனமுவந்து உற்சாக வரவேற்பளித்தனர்.

இதன் பிறகு பல பாகங்களுக்கும் சென்று கலைஞர்களை நேரடியாக சந்தித்து இந்த நிகழ்ச்சியை ரசிகர்களை வெகுவாகக் கவரும் நிகழ்ச்சியாக மாற்றினேன்.

ஆனால் தமிழகத்திலும் இந்நிகழ்ச்சி மாபெரும் வெற்றியடையும் என்று நான் நினைக்கவில்லை. பல தனியார் தொலைக் காட்சிகள் இந்தியாவில்ஆரம்பிக்கப்பட்டன. அதில் இந்த பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சியை அந்தாக்ஷரி, பாடுவோர் பாடலாம் என்று பல பெயர்களில் புகழ் பெற்ற பாடகர்களைக் கொண்டே முயன்றார்கள்.

இவ்வேளையில் திரு. ரமேஷ் பிரபா அவர்கள் இந்த நிகழ்ச்சியை ஆரம்பித்தவரை வைத்தேநடத்தினால் என்ன? என்று முதன் முதலில் வானொலிக்காக தினமலர் பத்திரிகை சார்பில் சென்னையிலும் கோயம்புத்தூரிலும் ஒலிப்பதிவு செய்து இலங்கை வானொலியின் தென்னிந்திய சேவையில் ஒலிபரப்பு செய்யப்பட்டது.

பின் சன் தொலைக்காட்சியிலும் இந்த நிகழ்ச்சியைக் கொண்டு வரவேண்டும் என திரு. ரமேஷ் பிரபா அவர்கள் முயற்சித்த போது வானொலியை என்னால் மறக்க இயலாது... வானொலிக்கும் தொலைக்காட்சிக்கும் சேர்த்தே இதை யார் தயாரிக்க முன் வருகிறார்களோ அப்போது என்னால் ஒத்துழைக்க இயலும் என்று நான் சொன்னேன்.

அப்போது சென்னையில் புகழ் பெற்ற லலிதா நகைமாளிகையினர் இந்த நிகழ்ச்சியை தயாரிக்க முன் வந்தனர். லலிதாவின் பேராதரவோடு தொடர்ந்து 6 வருடங்களைக் கடந்திருக்கிறோம் என்பது மட்டுமல்லாது வானொலியிலும் தொலைக்காட்சியிலும் தென்கிழக்காசியாவிலேயே ஒலிபரப்பான, ஒளிபரப்பான முதல் நிகழ்ச்சி பாட்டுக்குப் பாட்டுத்தான் என்பது என்னை மிகவும் பெருமிதம் கொள்ள வைக்கின்றது.

நாளுக்கு நாள் இந்த நிகழ்ச்சியின் அபிமானம் பெருகிக்கொண்டே வருகிறது. சகல தரப்பு மக்களும் இதில் கலந்து கொள்ள ஆசைப்படுகிறார்கள். பதிவு செய்கின்ற நேரத்தில் கூட்டம் அரங்குகளில் நிரம்பி வழிகின்றது. மக்களின் பேராதரவு சில சமயங்களில் என்னை திக்குமுக்காடச் செய்கின்றது.

இந்த நிகழ்ச்சி மூலமாக என்னை இனம் காண்பதில் எனக்கிருந்த மனக்குறை நீங்கி, அதுவே எனக்கு மனநிறைவு தருவதாகவும்... இன்று புலம் பெயர்ந்து வாழும் தமிழர் மத்தியிலும் தமிழைக் கற்றுக் கொள்வதற்கான ஒரு ஊடகமாக இந்த பாட்டுக்குப் பாட்டு திகழ்வதைக் கண்டும் இந்த நிகழ்ச்சியை அறிமுகப்படுத்தியவன் என்ற வகையில் பரிபூரணமான மன நிறைவு ஏற்பட்டிருக்கிறது.

தமிழகத்தின் மூலை முடுக்குகளிலும் கூட இலங்கை வானொலியின் பக்கம் ரசிகர்களை ஈர்க்கவைத்த எஸ்.பி. மயில்வாகனன் அவர்களோடு நீங்கள் பணிபுரிந்த பசுமையான நினைவுகளை ரசிகனுடன் பகிர்ந்து கொள்ளுங்களேன்?....

ஹமீது - மயில்வாகனன் அவர்கள் இலங்கை வானொலியின் வர்த்தக சேவையில் இணைந்த பிறகுதான், கடல் கடந்தும் கூட இலங்கை வானொலியின் பெருமை உயர்ந்தது. தமிழகத்திலே அன்றைக்கு இருந்த நான்கு கோடி மக்களும் விரும்பிக் கேட்ட ஒரே வானொலி என்ற அந்தஸ்திற்கு இலங்கை வானொலியை உயர்த்திவர் அவர்தான்.

வெறும் சினிமாப் பாடல்களை மட்டும் ஆதாரமாகக் கொண்ட ஒரு வர்த்தக சேவையிலே, வித்தியாசமான நிகழ்ச்சி வடிவங்கள், வித்தியாசமான அறிவிப்பு முறை என்ற மாற்றங்கள் மயில்வாகனன் என்பவரால்தான் இந்த அளவுக்குப் புகழ்பெற்றது.

குறிப்பாக, சினிமா வட்டாரத்தில் மிகவும்புகழ் பெற்றவராக அவர் விளங்கினார்.

அன்றைக்கு வெளிவந்த ஒரு திரைப்படத்தில்கூட மயில்வாகனன் அவர்களைப்பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது.' நான் கண்ட சொர்க்கம்' என்ற திரைப்படத்தில் நடிகர் தங்கவேலு அவர்கள் எமலோகம் செல்வதாக வரும் காட்சியில் அவர் எமனோடு உரையாடும்போது அங்கிருந்த வானொலியில் மயில்வாகனின் குரல் கம்பீரமாக கணீரென்று ஒலிக்கும்.
அப்போது அடடா மயில்வாகனன் இங்கே கூட வந்துவிட்டாரா?! என்று தங்கவேலு சொல்வார்.

மிகச்சிறிய வயதிலேயே வானொலியின் சிறுவர் மலரில் ஆரம்பித்து நாடகங்களிலெல்லாம் நிலையக்கலைஞனாக நடித்திருந்தாலும், 1967 ம் ஆண்டிலேதான் நான் அறிவிப்பாளனாக இலங்கை வானொலியில் எனது சேவையை ஆரம்பித்தேன்.

அந்த நேரத்தில் வயதில் மிகவும் மூத்தவரான மயில்வாகனன் அவர்கள் ஒரு நண்பனைப் போல மாணவப் பருவத்திலே எப்படி இருப்போமோ அவ்வளவு தூரம்அந்நியோன்னியமாகப் பழகினார்.

என்னை மட்டுமல்லாமல் என்னோடு இணைந்த சக அறிவிப்பாளர்களையும் கூட தட்டிக்கொடுத்து வளர்த்துவிட்டவர் அவர்.

வானொலி நிலையத்திற்கு வெளியில் நான் நாடகமன்றம் ஒன்றை ஆரம்பித்தபோது கூட எனக்கும் என் நண்பர்களுக்கும் காரியாலயமாகப் பயன்படுத்த தமது இல்லத்தையே வழங்கி எங்களை உற்சாகப் படுத்தினார்.
தம்மையும் ஒரு இளைஞனாக மாற்றிக்கொண்டு எம்மை ஊக்குவித்த மாமனிதர் அவர்.

உங்கள் குரல் இளமையின் ரகசியம் என்ன?

ஹமீது- ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் நான் நிற்காமல் பல்வேறு அம்சங்களைப் பற்றியும் தெரிந்து கொள்ளவேண்டும் என்றும், தற்கால விஞ்ஞான மாற்றங்களை உள் வாங்கிக் கொண்டு அதற்குத் தகுந்தாற்போல நிகழ்ச்சிகளை வடிவமைக்க வேண்டும் என்றும்... ஒரு மாணவ சிந்தனையோடு இன்றுவரை கற்றல் நிலையிலேயே நான் காணப்படுவதால் உள்ளத்தளவில் நான் இளைஞனாக இருக்கிறேன்.

அகத்தின் அழகு குரலில் தெரியும் என்பதால் முடிந்தவரையிலும் என்னுடைய அகத்தை சுத்தமாக வைத்திருக்கிறேன். மொழியை நேசித்தல் என்பது பெற்ற தாயை நேசிப்பதற்கு சமம்.

என்னைப்பொறுத்தவரையில் தாய்மொழி என்பது, தந்தை பேசிய மொழியோ அல்லது தாய் பேசிய மொழியோ அல்ல.

குழந்தை முதன் முதலில் பேசிய மொழி.

ஆகவே நான் முதன் முதலில் பேசிய மொழி தமிழ்.

அதன் பால் அளவு கடந்த நேசம் வைத்துள்ளதால் வார்த்தைகளை கூட கடித்துக் குதறாமல் கேட்பவருடைய காதுகளை இம்சை செய்யாமல் அழகாக வார்த்தைகளை உச்சரிக்கக்கூடிய ஒரு பக்குவம் வரும்.

ஆகவே கால மாற்றங்களை கருத்தில் கொண்டு புதிய தொழில் நுட்ப யுக்தியோடு நிகழ்ச்சிகளை தயாரித்து மொழியை நேசித்து நாம் அறிவிப்புச் செய்கின்றபோது எவர் குரலும் எந்தவயதிலும் இனிமையானதாகத்தான் இருக்கும்.

ஒப்பிடுங்கள்......அறிவிப்பாளர் ஹமீது, நிகழ்ச்சி அமைப்பாளர் ஹமீது, நடிகர் ஹமீது, ரசிகன் ஹமீது ...?

ஹமீது- எனக்கு மிகவும் பிடித்ததை முதலில் சொல்கிறேன். ரசிகன் ஹமீது ...
எதனையும் நன்றாக ரசிக்கத் தெரிந்தவன் தான் நல்ல ரசனையோடு அதை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லமுடியும்.

சிறு வயது முதலே நான் ஒரு நல்ல ரசிகன். ரவிசங்கரின் சித்தார் என்றாலும், ஹரி பிரசாத் சௌரஷியாவின் புல்லாங்குழல் என்றாலும், கர்நாடக சங்கீதமென்றாலும், துள்ளிசையாக இருந்தாலும் எல்லா வகையான இசை வடிவங்களையும் நான் நன்றாக ரசிப்பேன்.

வானொலி அறிவிப்பாளர் ஹமீது - வானொலி என்பது என்னுடைய தாய்வீடு. கலைத்துறையில் என்னை உருவாக்கி வளர்த்த வானொலிக்கு நான் மிகவும் கடமைப் பட்டவன்.

நடிகர் ஹமீது - நான் வானொலிக்கு வருவதற்கு முன்னரே என்னுடைய பள்ளிக்கூட நாட்களில் 8 வயதில் முதன் முதலாக மேடையேறியிருக்கிறேன். நிறைய நாடகங்களை வானொலியிலும், மேடையிலும் நெறியாள்கை செய்து தயாரித்து இருக்கிறேன்.

விசேஷமாக சொல்வதென்றால் உலகத் தமிழாராய்ச்சி மாநாடு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற போது அதன் கலை நிகழ்ச்சிகளின் நிறைவு நாளன்று மூன்று நாடகங்களை தேர்வு செய்தார்கள்.

அதில் முழுக்க முழுக்க பெண்களை வைத்து நெறிப்படுத்திய இராவணேஸ்வரனுடைய கதையை அரங்கு நிரம்பி வழிய யாழ் வீரசிங்கம் மண்டபத்திலே நான் மேடையேற்றியது, இன்றும் என் அடி மனதில் பசுமையாக இருக்கிறது.

மிக இளம் வயதிலேயே ஜான்சிராணியாக நான் நடித்திருக்கிறேன்.

தமிழகத்திலே வீரபாண்டிய கட்டப்பொம்மன், கர்ணன் போன்ற திரைப்படங்கள்வருவதற்கு முன்னரே நான் கட்டப்பொம்மனாகவும், கர்ணனாகவும் வேடமேற்று நாடகங்களில் நடித்திருக்கின்றேன்.

பின்பு அறிவிப்பாளனாக மாறிய பிறகு கூட இசையும் கதையும் என்ற நிகழ்ச்சி எனக்கு மிதவும் வரவேற்பளித்திருக்கிறது.

பின்னர் நானே தயாரித்த நாடகம் தான் கோமாளிகள். அது வானொலியில் 3 1/2 ஆண்டுகள் ஒலிபரப்பாகியது. அந்த வரவேற்பைப் பார்த்ததும் நண்பர் ஒருவர் திரைப்படமாக தயாரிக்க முன்வந்தபோது 1 மாதத்தில் அதன் படப்பிடிப்பை முடித்தோம். அதில் ஐயர் வேடத்தில் நான் நடித்திருந்தேன்.

பின்னர் நீண்ட இடைவேளைக்குப்பின் இசைப்பயணம் என்றொரு திரைப்படத்துக்காக இலங்கையிலேயே படப்பிடிப்பை நடத்த தமிழகக் கலைஞர்கள் வந்த போது அப்துல் ஹமீதாக அதில் நடித்திருக்கிறேன்.

பின்பு சூர்யோதயம் என்ற பெயரில் இத் திரைப்படம் வெளியானது. இதன் பிறகு நண்பர் கமலஹாசனுடைய அன்பு வேண்டுகோளுக்கிணங்க தெனாலியில் அப்துல் ஹமீதாகவே நடித்தேன்.

உங்கள் பார்வையில் இலங்கை ரசிகர்கள் மற்றும் அவர்களோடு ஏற்பட்ட மறக்கமுடியாத சம்பவங்கள்?...

ஹமீது- இலங்கை ரசிகர்கள்துள்ளிசை, டப்பாங்குத்து போன்ற பாடல்களை விட நல்ல மெட்டமைப்புடன் கூடிய பாடல்களுக்கு அதிக முக்கியத்துவம் தருகிறார்கள்.

யார் பாடுகிறார்கள் என்பதற்கும், யார் இசையமைத்திருக்கிறார்கள் என்பதற்கும் அதிக முக்கியத்துவம் தராமல்... நல்ல கற்பனை வளம் நிறைந்த தரமான பாடல்களை ரசிப்பதில் தொன்று தொட்டு இலங்கை ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

மறக்க முடியாத சம்பவம் என்று கூறும்போது, நிறைய பேசிக்கொண்டே போகலாம். ஆனாலும் குறிப்பிட்ட ஒன்றை மட்டும் சொல்கிறேன்.

இது திருகோண மலையில் பாட்டுக்குப்பாட்டு நிகழ்ச்சியின் போது நடைபெற்றது.

பெரும்பாலும் போடடியின் முன்பே ஓரளவு சுருதியுடனும் தாள ஞானத்துடனும் பாடுபவர்களை தேர்வு செய்துவிடுவோம். ஆனால் யாருடன் யாரை போட்டியிட வைப்பது என்பதை இறுதி நேரத்தில்தான் மேடையில் தீர்மானிப்போம்.
நிகழ்ச்சியின் இனிமைக்காக ஒரு ஆண் போட்டியாளரையும், ஒரு பெண் போட்டியாளரையும் அழைப்போம்.

அப்போது ஆணை அவரது அபிமான பாடலை பாடச்சொன்னேன். அவர் ஒரு சோகப் பாடலை பாடினார்.

பிறகு அந்தப் பெண்ணை அபிமான பாடலை பாடச்சொன்னேன். அவரும் ஒரு சோகப்பாடலையே பாடினார்.

இரண்டுமே காதல் தோல்வியை பிரதிபலிக்கும் பாடல்கள்!

அதன் பிறகு குறிப்பிட்ட எழுத்துக்களை நான் சொன்ன போதும் காதல் தோல்விப் பாடல்களே மாறிமாறி ஒலித்தன.

என்ன பொருத்தம் இந்த பொருத்தம் ! என்றெல்லாம் நகைச்சுவையாக சொல்லிவிட்டு நான் தற்செயலாக திரும்பிப்பார்த்தபோது இருவர் கண்களிலும் தாரை தாரையாக கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.

பிறகு எனக்கே சங்கடமாகிப்போய் நிகழ்ச்சியை முடித்துவிட்டேன்.

பிறகு அந்த மேடையிலிருந்த அந்த ஊரைந்சேர்ந்த நண்பர்கள் என்னிடம் அவர்கள் இருவரும் காதலர்கள்.

பல வருடம் காதலித்தும் வாழ்வில் இணையமுடியாமல் வேறு வேறு இடங்களிலே திருமணம் முடித்துக்கொண்டவர்கள்.

நீண்ட நாட்களின் பின்னால் இந்த மேடையிலேஅவர்கள் உங்கள் பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சி மூலம் தங்களை சற்று ஆசுவாசப்படுத்தியிருக்கின்றார்கள் என்று சொன்னதும் அவர்களை எண்ணி என் நெஞ்சம் கனத்துப்போனது.

இந்தியாவிலிருந்து வந்து உங்களை பெருமிதப்படுத்திய விமர்சனங்கள்?.....

ஹமீது- இலங்கை வானொலியில்ஒலிபரப்பாகிய ஒரு வீடு கோயிலாகிறது நாடகத்தை நடிகர் திலகம் சிவாஜிகணேசன் அவர்கள் தொடர்ந்து கேட்டிருக்கின்றார்.

ஒரு முறை வானொலி பேட்டிக்காக அவரை சந்தித்தபோது இலங்கை வானொலியிலிருந்து என்னை பேட்டிகாண வந்தததை விட உங்களுடைய நாடகங்களையும் வானொலியின் இதர நிகழ்ச்சிகளையும்மிகவும் விரும்பி ரசிக்கும் ரசிகன் என்ற முறையில் உங்களுக்கு பதிலளிக்க மிகந்த மகிழ்ச்சியோடு இருக்கிறேன் என்று சொன்னது என்னை மிகவும் பூரிக்கச்செய்தது.

பிரபல நாவலாசிரியர் பாலகுமாரன் அவர்கள் 'பெண்மணி' என்ற இதழில் என் ஞாயிற்றுக் கிழமை காலைப்பொழுதை திரு. அப்துல் ஹமீது அவர்கள் பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சி மூலம் கொள்ளை அடித்துவிடுகிறார். நான் மட்டுமல்ல சமுதாயத்தின் அனைத்து தரப்பினரையும் மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தியிருக்கின்றது இந்த நிகழ்ச்சி என்று குறிப்பிட்டிருந்தார்.

திரையுலகில் எம்.ஜி.ஆர் - சிவாஜி மாதிரி அறிவிப்புலகில் ஹமீது - ராஜா என்றொரு ஆரோக்கியமான போட்டி ஒரு காலத்தில் நிலவியது. இந்தப் போட்டியின் மத்தியில் உங்கள் நட்பு எப்படி இருந்தது?

ஹமீது- அதை போட்டி என்று சொல்ல மாட்டேன்.

ஆரோக்கியமான நட்புதான் நிலவியது.

அவருக்கு வர வேண்டிய சந்தர்ப்பம் அவருக்கும், எனக்கு வர வேண்டிய சந்தர்ப்பம் எனக்கும் இறைவனால் கொடுக்கப்பட்டது.

அறிவிப்புப் பாணியில் பல விதமான வித்தைகளை அவர் கையாண்டார். அதில் வெற்றியும் பெற்றார்.

பகுதி நேர அறிவிப்பாளராக இருந்தாலும் குறுகிய காலத்தில் அவர் பிரபலமானார்.

அவர் இருக்கின்ற இடத்தில் சிரிப்பொலிக்கு பஞ்சமில்லை.

நானும் அவரும் சேர்ந்து பல நிகழ்ச்சிகளுக்கு ஒன்றாக பயணம் செய்திருக்கின்றோம்.

ஒரே நாளில் காலையில் அவருடைய நிகழ்ச்சி மாலையில் என்னுடைய நிகழ்ச்சி என்றெல்லாம் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றிருக்கின்றது.

என்னிலும் வயதில் மூத்தவரான அவருக்கும் எனக்குமிடையிலான நட்பு நன்றாகவே இருந்திருக்கின்றது.

[இலங்கைத் தமிழ் நெஞ்சங்களின் கலாச்சார பிரதிபலிப்பை வெளிக்கொணரும் ஒரு ஊடகமாக இலங்கை வானொலி பணிபுரிந்திருக்கின்றது என்றால் அதில் மிகையன்று.

நம் சுக துக்கங்களில் பங்கெடுத்துக் கொண்டு நமது காயங்களுக்குக் கூட மருந்திட்டுச் சென்றிருக்கின்றது இலங்கை வானொலி.

காலை எழுந்தவுடன் படிப்பு பின்னர் பள்ளிக்கூடம் பள்ளிமுடிந்தவுடன் டியூஷன் பரீட்சை முடிந்தவுடன் பொறியியலாளர், கணக்கர், வைத்தியர், வக்கீல், வெளிநாட்டுப் பயணம், வெளிநாட்டு வாழ்க்கை என ஒரு வட்டத்திற்குள்ளேயே சுழன்று சொந்தமாய் அதிக படைப்புகளை உருவாக்கவும் உணர்ந்து கொள்ளவும்

நேரமற்றுப் போன ஒரு சமுதாயத்தின் மத்தியிலும் பல எழுச்சிகளை ஏற்படுத்தியிருக்கின்றது இலங்கை வானொலி - உதயா ]

செவ்வி கண்டு எழுதியவர்- இசையமைப்பாளர் உதயா

1 comments:

said...

வணக்கம் வானொலிபித்தன்....உங்களுடைய அண்மையில் உங்கள் வலை பதிவை பார்க்க நேர்நந்து.. மிக நன்றாக உள்ளது...பழைய ஞாபங்களை அசை போட வைத்தது.... உங்கள் ஆக்கங்கள் தொடர வாழ்த்துக்கள்