Friday, February 10, 2006

வானொலி அறிவிப்பாளர் வரகுணன் பதில்கள்


வானொலி அறிவிப்பாளர் வரகுணன் பதில்கள்
-------------------------------------------------------------ஆர். மாதவி, குடந்தை.

பெண் என்பவள் புதுக்கவிதையா? மரபுக் கவிதையா?

பெண் அனைத்துத் துறைகளிலும் சுடர்விடும் போது அவள் புதுக் கவிதையாகிறாள்.
நம் நாட்டின் கலாச்சாரப் பெருமையினைக் கட்டிக் காக்கும் போது அவள் மரபுக் கவிதையாகிறாள்.

கே.ஆர். உதயகுமார், சென்னை.

வெளிநாட்டைப் போல நம் நாடும் எப்போது வியக்கத்தக்கதாக மாறும்?

சென்னைக்கு வந்திருந்த இத்தாலிய நண்பர்கள் சிலரை அழைத்துக் கொண்டு மகாபலிபுரம் சென்றிருந்தேன். போகும் வழியில் வேர்க்கடலை வாங்கி கொறித்துக் கொண்டு சென்றோம். வேர்க்கடலை தீர்ந்தவுடன் கையிலிருந்த காகிதத்தைக் கசக்கி ஜன்னல் வழியே வீசிவிட்டேன்.

மகாபலிபுரம் வந்த பின்னர் தான் கவனித்தேன். மற்ற அனைவரும் வேர்க்கடலை மடித்த காகிதத்தை கையிலேயே வைத்திருந்தார்கள்.
ஒருவர் அவற்றை எல்லாம் ஒன்றாக வாங்கி சற்றுத் தள்ளியிருந்த குப்பைத் தொட்டிக்குச் சென்று போட்டுவிட்டு வந்தார்.

என் கன்னத்தில் யாரோ ஓங்கி அறைவது போல இருந்தது.

எப்போது நம் நாட்டை நாம் மனத்தாலும் செயலினாலும் நேசிக்க ஆரம்பிக்கின்றோமோ அப்போது தான் நீங்கள் குறிப்பிட்ட அந்த மாற்றம் உருவாக ஆரம்பிக்கும் உதயகுமார்.

எல்.எம். சீதாமகன், மதுரை - 10.

புகழ் என்பது போதையா?

போதைப் பொருளுக்கு அடிமையானவன் அதிலிருந்து மீண்டு வர எவ்வளவு சிரமப்படுகிறான். தன்னைச் சுற்றி ஒரு உலகைச் சிருஷ்டித்து அதிலே ராஜாங்கம் நடத்துகிறான். அதிலிருந்து வெளிவர அவன் விரும்புவதில்லை.
குறிப்பிட்ட தருணங்களில் போதை இறங்கும் போது அதற்கு ஈடு செய்ய மேலும் மேலும் தவறுகளைச் செய்கின்றான். இன்பத்தை எதிர்பார்த்து அதற்கு அடிமையாகி விடுகிறான். வாழ்க்கையை அழித்துக் கொள்கிறான்.

புகழ் என்பதும் முதலில் இன்பத்தைக் கொடுத்தாலும் - ஒரு மனிதனை அழிவுப்பாதை வரை கொண்டு வந்து சேர்த்துவிடும் என்பதால் புகழ் என்பதும் ஒரு போதையே.

தளபதி சூர்யா இளைய குமாரன், சென்னை - 7

வாழ்க்கையை ஒருவன் சீரான பாதையில் நடத்திச் செல்ல அவனுக்கு தேவையானது நா -நயமா அல்லது நாணயமா ?

உள்ளத்தில் உண்மையொளி உண்டானால் வாக்கினில் ஒளி உண்டாகும் என்பது பாரதியின் வாக்கு.
வாழ்க்கையில் துணையாக வருவது நாணயம் மிக்க நா நயம்.

திருமதி நீல . முத்துலக்குமி, திண்டுக்கல்

ஒரு பக்கம் பெண்கள் ஆண்டு, பெண் சுதந்திரம், பெண் விடுதலை என்று பேசிக்கொண்டு மறு பக்கம் பெண்ணை அடக்கி ஆண்டு வரும் ஆண்களின் மத்தியில் உண்மையான சுதந்திரம் பெண்ணுக்கு எப்போதுதான் கிடைக்கும் ?

கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தின் முன் தோன்றியது மாமியார் மருமகள் சண்டை.
மாமனார் மருமகன் சண்டை போட்டார்கள் என்று எங்காவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
நிச்சயமாக பெண்களுக்கு சுதந்திரம் வேண்டும்.
பெண்களிடமிருந்து .
பெண்ணின் முதல் எதிரி பெண்தான். ஆண் அல்ல .

இளமையில் வறுமை - முதுமையில் நோய் ...... இதில் கொடியது எது ?

போதுமென்ற மனமும், புரிந்து கொள்ளும் குணமும் கொண்ட மனைவி வாய்த்தவனுக்கு இளமையில் வறுமை இன்பமே.
அன்பும், அரவணைப்பும், தியாக உள்ளமும் கொண்ட மருமகள் வாய்த்தவர்களுக்கு முதுமையில் நோய் ஒரு பொருட்டா என்ன?
மொத்தத்தில் வாழ்க்கையின் இன்ப துன்பங்கள் அனைத்துமே பெண்களின் கைகளில் தான் உள்ளன.

திருமதி வசந்தா, திருச்சி

பிரச்சினையே வாழ்வாகும் போது என்ன செய்வது?

சின்னஞ்சிறிய கல் ஒன்றை எடுத்து கண்ணருகில் வைத்து பாருங்கள். அது உலகத்தையே மறைத்து விடும் .

ஆனால்..அந்தக் கல்லையே தூரக் கொண்டு போய் பாருங்கள்.எதையுமே அதனால் மறைக்க முடியாது.

அது போலத் தான்...

வாழ்க்கையில் பிரச்சினைகள் வரத்தான் செய்யும்.

ஆனால் ..... அதைத் தூரக்கொண்டு போனால் தூக்கி எறிந்து
அவற்றை பிரச்சினைகளாகப் பார்க்காமல் சவால்களாக மாற்றிவிட்டால் நாம் சாதனைகள் படைக்கலாம்.

[டாக்டர் வரகுணன் தற்போது கனடாவில் வசிக்கிறார்.]

0 comments: