Friday, February 10, 2006

சிவாஜியும், அப்துல் ஹமீதும்...







அடுத்து வரும் தலைமுறைகள் நடிப்பதற்கென்று எந்த ஒரு பாத்திரத்தையும் விட்டு வைக்காது அத்தனை பாத்திரங்களையும் ஏற்று நடித்து அந்த பாத்திரங்களாகவே வாழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள்.

அந்தப் பாத்திரங்களின் மூலம், நடிக்க வரும் அத்தனை நடிகர்களுக்குமே பாடம் நடத்திக் கொண்டிருக்கும் பல்கலைக்கழகமாகத் திகழ்பவர் அவர்.சிவாஜியைப் போல் தமிழை அழகாகவும், உணர்வு பூர்வமாகவும் உச்சரித்த நடிகர் இன்றுவரை இல்லை. இனியும் பிறக்கப் போவதில்லை என்றார் கவியரசர் கண்ணதாசன்.

தனக்கொரு இமேஜ் என்கின்ற எல்லை கட்டிக் கொள்ளாமல், குரூபியாய், கொள்ளைக் காரனாய், தொழு நோயாளியாய், மூத்துக் சிதைந்த முதியவராய், அத்தனை பாத்திரங்களையும் ஏற்கத் துணிந்த சிவாஜியின் ஆண்மையை வியக்கின்றேன் என்றார் 'கவிப் பேரரசு' வைரமுத்து.

தமது கொஞ்சு தமிழ்ப் பேச்சால் வானொலி மற்றும் தொலைக்காட்சி நேயர்களைக் கொள்ளை கொண்ட பாட்டுக்குப் பாட்டு பி.எச். அப்துல் ஹமீது அவர்கள்.. சிவாஜி பற்றிய தமது நினைவலைகளை, ஒரு ரசிகனின் பெருமிதத்துடன் இங்கே பகிர்ந்து கொள்கிறார்.

எனக்குத் தமிழைக் கற்றுக் கொடுத்த ஆசிரியர்கள் பலர் உண்டு.

ஆனால் ஒரு பாமரனும் கூட தமிழை எப்படி உச்சரிக்க வேண்டும் என்று கற்றுக் கொடுத்த ஆசிரியர் அவர்.

பள்ளி நாடகங்களில் நான் நடித்த காலம் தொட்டு வானொலி நாடகங்களில் நடித்தது வரை, வசன உச்சரிப்பிலும், பாவங்களை வெளிப்படுத்துவதிலும் அவரது பாதிப்பே என்னிடம் அதிகமாக இருந்தது.

'பைலட் பிரேம்நாத்' படத்தில் நடிப்பதற்காக அவர் இலங்கை வந்திருந்தபோது எனது மானசீக குருவான நடிகர் திலகத்தை இலங்கை வானொலிக்காகப் பேட்டி காணும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. அன்று தான் அவரை நான் முதன் முதலாகச் சந்தித்தேன்.

கொழும்பு நகரில் கடற்கரையை ஒட்டியிருந்த அந்த மிகப் பெரிய நட்சத்திர ஹோட்டலின் ஐந்தாவது மாடியில், கடலை எதிர்நோக்கி இருந்த உப்பரிகை போன்ற பகுதியிலே நிலா வெளிச்சத்திலே அவர் அமர்ந்திருந்தார்.

அவரை நெருங்கி...'வணக்கம் அண்ணா...'என்று நான் சொன்னதும் எனது கைகளைப் பற்றிக் கொண்டு 'வணக்கம் கேப்டன் சாம்பசிவம்' என்று அவருக்கே உரிய பாணியில் என்னை வரவேற்றார்.

கேப்டன் சாம்பசிவம் என்பது இலங்கை வானொலியில் ஒரு வருட தொடராக நான் தயாரித்து வழங்கிய ஒரு வீடு கோயிலாகிறது என்ற நாடகத்தில் நான் ஏற்று நடித்த கதாபாத்திரத்தின் பெயர் .

அந்தப் பாத்திரத்தின் பெயர், நடிகர் திலகத்தின் மனதில் அழுத்தமாகப் பதிந்துவிட்டது என்பதை அறியும்போது சொல்லொணா மகிழ்ச்சியும், அதே சமயம் ஒரு வித நடுக்கமும் என்னுள் பரவியது.

அவர் சொன்னார்...

என் மனைவி உடல் நலம் குன்றி மருத்துவமனையில் இருந்தபோது நானும் தங்கியிருக்க நேர்ந்தது. அப்போது பொழுது போக்காக இலங்கை வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்டேன்.

தற்செயலாக உங்கள் ஒரு வீடு கோயிலாகிறது நாடகத்தையும் கேட்டேன்.

அந்த நாடகம் என்னை வெகுவாகக் கவர்ந்ததால், தவறாமல் கேட்கத் தொடங்கினேன்.

அதிலும் நீங்கள் ஏற்று நடித்த கேப்டன் சாம்பசிவம் கதாபாத்திரம் என்னை மிகவும் கவர்ந்தது.

அன்று தொடங்கிய எங்கள் நட்பு, அவர் குடும்பத்தினர் அனைவரும் என்னையும் என் குடும்பத்தையும் நேசிக்கும் அளவுக்கு வளர்ந்தது.

ஒரு குடும்பம் ஒற்றுமையாக ஒரு கூட்டுப் பறவைகளாகத் திகழ வேண்டும் என்பதில் அவருக்கு மிகுந்த அக்கறை.

நடிப்புலகில் எத்தனையோ தலைமுறைகளைக் கண்ட அவர், தன் குடும்பத்துத் தலைமுறைகள் ஒன்றாக வாழ வேண்டும் என்பதிலும் மிகுந்த அக்கறை உள்ளவராக இருந்தார்.

நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்று அவர் பாடியது போலவே தன் வாழ்க்கையையும் அமைத்துக் கொண்டார்.

நடிகர் திலகம் அபாரமான நினைவாற்றல் கொண்டவர்.

அவரை முதன் முதலாகச் சந்தித்தபோது எனது மகனுக்கு ஒரு வயது தான்.அவனைத் தன் மடியிலே வாங்கி வைத்துக் கொண்டு பெயர் என்ன ? என்று கேட்டார்..

சிராஜ் என்று சொன்னேன். அவர் உடனே சிராஜூதீன் தவுலா என்ற வரலாற்று வீரனின் பெயரைக் குறிப்பிட்டு அவனை உச்சிமோந்தார்.

பின்பு, 21 ஆண்டுகள் கழித்து அவரை மீண்டும் சந்தித்தபோது அதே பெயரைச் சொல்லி என் மகனை வரவேற்றார்.

நடிப்புலகில் பலருக்கு நடிப்புக் கல்லூரியாக இருக்கும் கலைக்குரிசில் சிவாஜி கணேசனிடம் நான் காணும் சிறப்பு :

உலகப் புகழ்பெற்ற நடிக மேதைகளில், ஓவர் ஆக்டிங், அண்டர் ஆக்டிங் மற்றும் இவை இரண்டுக்கும் இடைப்பட்ட நடிப்பு... என தனித்தனிப் பாணியில் பிரகாசித்தவர்கள் உண்டு.

ஆனால் இந்த மூன்று பாணிகளிலும் நடிப்பை வெளிப்படுத்துவதில் வல்லவராக விளங்கிய நடிகர் உலகிலேயே சிவாஜி ஒருவர் தான்.

சமீபத்தில் நடிகர் நாசர் அவர்கள் தனது இரங்கல் செய்தியில் - சிவாஜி அவர்கள் பராசக்தியில் காட்டிய இயல்பான நடிப்பை இன்றுவரை எவராலும் சாதிக்க முடியவில்லை என்று சொன்னதையும் இங்கே நினைத்துப் பார்க்கிறேன்.

நடிகர் திலகம் அவர்களுக்கு பாரதத்தின் பெருமை மிக்க தாதா சாகிப் பால்கே விருது, அண்ணாமலைப் பல்கலைக்கழகம் வழங்கிய டாக்டர் பட்டம், பிரெஞ்சு அரசின் செவாலியே விருது அனைத்தும் வழங்கப்பட்டதை சிறப்பிக்கும் வகையில், தமிழகத்தை முந்திக் கொண்டு இலங்கையில்தான் முதல் மரியாதை விழா எடுத்தோம்.

அந்த விழா அமைப்புக்குழுவிலே நானும் இடம் பெற்றிருந்தது எனது பெரும் பாக்கியம்.

இனப் பிரச்சனையால் சிதறுண்டு போயிருக்கும் அந்த நாட்டிலே, கலைக்கு இன மத மொழி பேதம் கிடையாது என்பதை நிரூபிக்கின்ற வகையில், காமினி பொன்சேகா முதற்கொண்டு சிங்களப் படவுலகின் முன்னணிக் கலைஞர்கள் அனைவரும் கலந்து கொண்டு அந்த விழாவைச் சிறப்பித்தார்கள்.

சிவாஜி மன்னன் அணிந்த மணியைப்போல் முழுக்க முழுக்க தங்கத்திலே செய்து விழா மேடையில் அவருக்குச் சூட்டினோம்.

அந்த கௌரவத்தை பார்த்ததும் நடிகர் திலகம் அவர்கள் மிகவும் நெகிழ்ந்து போய்விட்டார். சபையோருக்கும் மெய்சிலிர்த்தது.

அதன் பிறகு -சிங்கப்பூரில் சுமார் பத்தாயிரம் பேர் கூடியிருந்த மாபெரும் அரங்கிலே அந்த மகத்தான கலைஞனுக்குப் புகழாரம் சூட்டும் பெருவிழா நடைபெற்றபோது அதைத் தொகுத்து வழங்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது.
(அதற்கு சில ஆண்டுகள் முன்புதான், அதே அரங்கில் முதன் முறையாக நெஞ்சுவலி ஏற்பட்டு அவர் மயங்கி விழுந்தார். அப்போதே அவரை இழந்தவிட்டோம் என்ற வதந்தி காட்டுத்தீ போல உலகெங்கும் பரவியது)

அதே மேடையில் தனக்கே உரிய கம்பீரத்துடனும் சாந்தம் தவழும் புன்னகையுடனும் வந்து நின்ற நடிகர்திலகம்...கோடிக்கணக்கான ரசிக நெஞ்சங்கள் வழங்கிய நல்லாசியும், இறைவன் அருளும்தான் என்னைக் காப்பாற்றின.. என்று கண்ணீர் மல்கக் கூறினார்.

அந்த விழாவைச் சிறப்பிக்க வந்திருந்த ஒவ்வொரு பிரமுகரையும் குறிப்பிட்டு அவர் நன்றி தெரிவிக்கும்போது

...இத்தனை ஆயிரம் மைல்கள் கடந்து பறந்து வந்து என்னை கௌரவிக்க மேடைக்கு வந்திருக்கும் இலங்கை நண்பன் அப்துல் ஹமீதின் அன்பை என்னவென்று சொல்வேன்... என்று சொன்னார்.

நான் உருகிப் போனேன்.

நடிகர் திலகத்தின் இறுதி ஊர்வலத்தை நேர்முக வர்ணனை செய்யுமாறு இலங்கை வானொலி, லண்டன், ஆஸ்திரேலியா மற்றும் கனடா நாடுகளில் உள்ள 24 மணி நேர தமிழ் சாட்டிலைட் வானொலி நிலையங்கள் என்னைக் கேட்டுக் கொண்டன.

சிவாஜி கணேசனின் அன்னை இல்லத்தில் ஆரம்பித்து, பெசன்ட் நகர் மயானத்தில் இறுதிச் சடங்கு முடியும்வரை அந்த நேர்முக வர்ணனையை கண்ணீரையும் சோகத்தையும் கட்டுப்படுத்த முடியாத ஒரு சூழ்நிலையில் நான் வழங்க வேண்டியதாயிற்று.

ஒரு கைத்தொலைபேசியை வைத்துக் கொண்டு நேர்முக வர்ணனையை வழங்கிக் கொண்டிருந்தேன்.

ரஜினிகாந்த், கமல்ஹாசன், இளையராஜா போன்றவர்கள் மட்டுமன்றி விஜய் போன்ற இளைய தலைமுறை நடிகர்கள் அனைவருமே அப்பா.. அப்பா என்று அழைத்துக் கதறிய காட்சி என்னை மேலும் நிலை குலைய வைத்தது.

அவரைப் போல் திரையில் சோகத்தைப் பிழிந்து தந்த ஒரு நடிகர் கிடையாது.

அவர் மறைவும் உலகத் தமிழர் இதயங்களில் அந்த அளவுக்கு சோகத்தைப் பிழிந்து தந்தது என்றால் அது மிகையில்லை.

அந்த சோகச் சூழலில், மனம் கசிந்து நான் கொஞ்சம் தடுமாறிய வேளையில் என் கைத்தொலைபேசியை யாரோ திருடிவிட்டார்கள்.

பின்பு, இயக்குனர் கே.எ°.ரவிக்குமாரின் உதவி இயக்குனர் சுப்பிரமணியம், தயாரிப்பாளர் கலைப்புலி தாணு ஆகியோர் தமது கைத்தொலைபேசியைக் கொடுத்து நேர்முக வர்ணனை தடையின்றித் தொடர உதவினர்.

இந்த சிறியேனுக்கும், தமது இதயத்தில் நண்பன் என்ற பெரிய அந்த°தைக் கொடுத்து அழகு பார்த்த என் மானசீக குருவுக்கு, என்னால் கடைசியாகச் செய்ய முடிந்த ஒரு சிறு காணிக்கையாக இந்த நேர்முக வர்ணனை வாய்ப்பை இறைவன் எனக்கு வழங்கினானோ என்னவோ....


செவ்வி கண்டவர்- யாழ் சுதாகர்

1 comments:

Anonymous said...

PLEASE ADD AN ICON FOR DOWNLOADING YOUR FONTS. I AM NOT ABLE TO VIEW YOUR SITE